Tuesday, October 26, 2010

குரங்கின் பிடியில் .......

சைதாபேட்டையில் இருந்து பல்லாவரம் வரை செல்ல மின்சார ரயில் பயணம் சுகமானது தான். நமது பயணம் சுகமாக இருப்பது நமது கையில் உள்ளது, நமது கையில் உள்ளவைகளில் உள்ளது. எனது உடன் பயணிப்பவர்களை நான் எப்போதும் கவனித்துக்கொண்டே இருப்பேன். நிச்சயமாக அது ஒரு இரவு ரயில் பயணமாக தான் இருக்கும். இருந்தாலும் ஒரு போர்வை, ஊதினால் உருவாகும் தலையணை , மெத்தை விரிப்பு, கட்டு சாதம் என்று ஒரு ப்ரீ சைஸ் பயண பை அவர்களுடன் வரும். ஒருவேளை ஒரு குடும்பம் என்றால் நிச்சயம் நாலு பைகள் அதிலும் ஒரு குழந்தை இருந்தால் ஏழு பைகள். அப்பா, பையை தூக்குவதிலும், பாதுகாப்பதிலும் , பயணத்தின் சுகம் போய்விடும்.
பயணம் சுகமாய் இருக்க, சுமைகளை குறைத்துக்கொள்ளுங்கள். போகிறபோக்கில் கிடைப்பதை உண்டு நிம்மதியாய் தூங்கி, பயணத்தை சுகமானதாக்குங்கள்.
இப்படி தான் நான் ஒருமுறை சைதாபேட்டை யில் இருந்து பல்லாவரம் வரை நான் மின்சார ரயிலில் வந்து சேர்ந்தேன். ரயில் பாதை மேம்பாலத்தில் ஏறி வலதுபக்கம் திரும்பும் பொது, இடது பக்க தடுப்பின் அருகில் அறுபது வயது மூதாட்டி , சுருக்கு பை விற்பதை பார்த்தேன். எனது அம்மாச்சியின் இடுப்பில் எப்போதும் ஒரு சுருக்கு பை இருக்கும். அதில் நிச்சயமாய் பணமும் இருக்கும். சிறுவயதில் நான் அதை கேட்டு விளையாடி இருக்கிறேன். சதுரமான ஒரு பை, இரண்டு முனை கயிறுகளை இழுத்த உடன் , பை மூடிக்கொள்ளும்.
விதவிதமான நிறங்களில் , பட்டு போன்ற துணிகளில் சுமார் ஐம்பது சுருக்கு பைகள். எல்லாமே அழகாய் இருந்தது. தேர்ந்தெடுப்பது கடினம் தான். நீல நிற பட்டு போன்ற அந்த பை மிகவும் அழகாய் இருந்தது. முனை கயிறுகளில் சிவப்பு நிற சிறிய குஞ்சங்கள் இருந்தது. முனை கயிறுகள் வெள்ளை நிறம். பட்டு வண்ண குறுக்கு கோடுகள் பை முழுவதும் இருந்தது. இருபது ருபாய் கொடுத்து நான் அதை வாங்கினேன்.
பொதுவாக எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், அதற்கான பணத்தை எப்போதும் கையில் அல்லது வங்கியில் முன்னதாகவே வைத்துவிடுவேன். மிகவும் தரமாகவும் விலை குறைவாகம் அந்த பொருள் எப்போதாவது கிடைக்கும். அப்போது அதை வாங்கிவிடுவேன். ஆனால் சுருக்கு பையை வைத்து என்ன செய்வது. எந்த விதத்திலும் எனக்கு அதனால் பயனில்லை. என்னிடம் உள்ள சில ஏலேக்ட்ரோனிக் தகவல் செமிப்பாங்களை (pen drive) அதில் போட்டு மூடினேன். காலப்போக்கில் அது எனது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறியது. மடி கணினி வாங்கிய பின் , எங்கு சென்றாலும் , எல்லாரும் அதை பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள் ( மனதிற்குள் கேலி செய்தார்கள்) நான் அதை என் இருப்பிற்கு அத்தாட்சியாகவே நினைத்தேன். ஒரு நாள் இரவு ஹோஸ்பெட் நகரின் பிரியதர்ஷினி ஹோடேலில் , தூங்கி விழிக்கும் பொது ஒரு குரங்கின் கையில் என்னுடைய சுருக்குப்பையை பார்த்தேன்.

கிஷ்ணதேவராயரின் தலைநகரமாக ஒருகாலத்தில் இருந்தது ஹம்பி. ஹம்ப்யில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு நகரம் தான் ஹோஸ்பெட். துங்கபத்ரை நதி கரையில் , ஏராளமான கனிம வளங்களை தன்னுள் கொண்ட இந்த நகரத்தில், குரங்குகளும் நிறைய உண்டு. இப்போது ஹம்பி வெறும் மணல் மேடு.

அது மிகச்சிறிய குரங்கு. ஜன்னல் கம்பியில் இருந்த ஒரு கால் சதுர இடைவெளியில், எனது அரைக்குள் நுழைந்த அது திரும்ப எத்தனிக்கும் பொது கண்ணாடி கோப்பையில் வால் பட்டதால் , கோப்பை தவறி விழ நான் விழித்துக்கொண்டேன். அதை மாத்திரம் எடுக்காதே என்று கத்திக்கொண்டே , வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தேன். என்னை பார்த்த வேகத்தில் வந்த வழியே அது திருமபிசென்றது. அதன் கையில் எனது நீல வண்ண சுருக்கு பை.

ஒரு டீ ஷர்ட் ஐ , மாட்டிக்கொண்டு கதவை கூட சாத்தாமல், படிக்கட்டில் இறங்கி ஓடினேன். நான் இருந்தது இரண்டாவது மாடி. ஹோட்டலுக்கு அருகில் இருத்த களாக்காய் மரத்திலிருந்து குரங்கு வந்திருக்கலாம். ஹோட்டல் வாசலில் இருந்த செக்யூரிட்டி இடம் , பந்தர்... பந்தர்...என்றபடி மரத்தின் அருகில் ஓடினேன். கன்னடத்தில் குரங்கிற்கு என்ன என்பது எனக்கு தெரியாது. தேசிய மொழியில் சொன்னதால் செக்யூரிட்டி புரிந்து கொண்டான். ஹோட்டல் சிப்பந்திகளும், வேறு சிலரும் கன்னடத்தில் பலவாறு பேசிக்கொண்டிருந்தார்கள். எனுரே என்று சிலர் என்னை கேட்டபோது, தெரிந்த கொஞ்சநஞ்ச கன்னடமும் மறந்து போனது. " பந்தர், மேரா பர்ஸ் " இதை தவிர மற்றதெல்லாம் செய்கையில் சொல்லி ஒரு வழியாய் அவர்களுக்கு புரியவைத்தேன்.

உதவவந்தவர்களில் ஒருவன் கைகளை தட்டி குரங்கினை விரட்ட முயற்சி செய்தான். எனக்கோ ஒரே நடுக்கம், குரங்கு கண்ணை விட்டு விலகி சென்று விட்டதானால் என்ன செய்வது. அந்த குட்டிக்குரங்கு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்தது. அதன் கையில் எனது சுருக்குப் பை. அந்த நேரம் பார்த்து எனது முதுகிற்கு பின்னே பயங்கர வெடிச் சத்தம். செக்யூரிட்டி , கையில் ஐந்தாறு வெடிகளோடு நின்று கொண்டிருந்தான். எனக்கு சுருக்குப் பை திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை போய்விட்டது.
வெடிச்சத்தம் கேட்டு அரைமணி நேரம் சென்ற பிறகு, முதல் முறையாக, மரத்தின் மேலிருந்து, ஒரு தகவல் பலகை விழுந்தது. அதில் குரங்கின் பல் தடம் பதிந்திருந்தது. மூன்று மணிநேர காத்திருப்பிற்கு பின்னால் எ னது கையில் எல்லா தகவல் செமிப்பாங்களும் இருந்தது. எல்லா வற்றிலும் குரங்கு , தன பல்லின் தடத்தை பதித்திருந்தது. நான் மரத்தின் அடியில் இருந்த திண்டில் அமர்ந்தேன். சுருக்குப் பையை திறக்க குரங்கிற்கு எப்படி தெரிந்தது? ஒருவேளை அதை குரங்கு கிழித்திருக்கலாம்.

அறைக்கு வந்து முதல் வேலையாக ஜன்னலை மூடினேன். குட்டி குரங்கின் செய்கைகளை நினைத்தபோது, எனக்கு கலைஞரின் ஐந்து வருட ஆட்சி காலம் தான் நினைவுக்கு வந்தது. எனக்கு சொந்தமான பணத்தையே , ஒரு ருபாய் அரிசியாகவும், வானுயர்ந்த மேம்பாலங்கலாகவும், தொலைகாட்சிப் பெட்டி யாகவும் , தனது பெயரில் தந்த இவருக்கும் . பல் தடம் பதித்து தந்த குட்டி குரங்கிற்கும் , என்ன வித்யாசம்??? சுருக்குப் பை எது என்பதும், ஜன்னல் எது என்பதும் உங்களுக்கு புரிகிறதா????

Saturday, October 23, 2010

பறந்த மனம் ..........

".................... ஆகிய நீங்கள், ...................... ஆகிய குணவதியை, திருமணம் செய்துகொள்ள, உங்களுக்கு சம்மதமா?" மனம் இல்லை என்று சொல்கிறது ஆனால் வாய் மூடியே இருக்கிறது. சட்டேன்று உடலை விட்டு மனம் வெளி செல்ல முயல்கிறது. காதுகள் கருப்பானாலும் சிவக்கின்றன. பொய்சொல்வது , அவ்வளவு கடினமில்லை. ஆனால் , அதை நினைவில் வைத்துக்கொண்டு, பின் ஒருமுறை , அல்லது பல முறை முன் சொன்னது பொய் அல்ல என்பதற்காய் பல நூறு முறை பொய் சொல்ல வேண்டியதாகிவிடுமே?


உண்மைக்கு பலமே கிடையாது. ஏனென்றால் , எல்லா உண்மையும் ஒரே பொய்யினால் பொய்யாகக்கூடுமே. எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவுகள் சாஸ்வதமாக அமைவதில்லை. ஆனால் எல்லா முடிவுகளும் யாரவது ஒருவருக்கு பிரச்சனையாகதான் முடிகிறது. சமரச முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைவதில்லை. ஏனென்றால் தோல்வி என்பதே ஒரு சமரசம் தான். ஒருவேளை நான் தோற்றுவிட்டேனோ? ஆம் என்று நினைத்தால் நான் சமரசவாதி, இல்லை என்று நினைத்தால் நான் தீவிரவாதி. தீவிரம் காட்ட வீரம் வேண்டுமா? விவேகம் வேண்டுமா? .............................ஆகிய நீங்கள் .......... ஆகிய குணவதியை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதமா?


நன்றாக வளர்ந்து நின்றுகொண்டிருக்கும், ஒரு அரச மரத்தில் நிறைய காகங்கள் கூடுகட்டி வாழ்கின்றன. அரசமரங்கள் அதிகமாக காணப்படுவதில்லை . நான் என்னுடைய வயதிற்கு (இருபத்தி ஒன்பது ) ஒருமுறை கூட அது பூத்து பார்த்தது கிடையாது. பின் எப்படி மகரந்தம் பரவும்? அரசமரத்தில் கனிகளை யாராவது பார்த்திருக்கிறீர்களா? பின் எப்படி விதை உருவாகும்? எனது நண்பர் செல்லபாண்டியன் சொல்கிறார், அரசமரம் , தான் விரும்பிய இடத்தில தானாய் வளரும் என்று. இது உண்மையா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இயற்கையின் தன்னிரைவட்டதுள் அடங்காததாகவே அரசமரம் வாழ்கிறது. ஒருவேளை அது அப்படி இருப்பதால் தான் அதற்க்கு மதிப்பு அதிகமாக இருக்கிறதோ ?

பூக்கள் மலர்கின்றது, தன்னுள் அது தேன் கொண்டிருக்கிறது. தேன் ஒரு கையூட்டு , மகரந்த பொதி சுமக்க. கையூட்டு பலன் தருவது காலத்தின் கைகளில். விதைக்கும் கணிக்கும் வித்தான தேன் தான் இளமை. இவையாவும் இயற்க்கை. இது யாருடைய முடிவாலும் நடப்பதில்லை. ............................. ஆகிய நீங்கள் .............. ஆகிய குணவதியை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதமா?



பாதிரியார் ஒருமுறை கேட்ட குரல் பலமுறை செவிப்பறையை சுற்றுகிறது. பஸ்ஸில் செல்லவேண்டுமெனில் ஓட்டுனரை நம்பவேண்டும். இரயிலில் இது சற்று மாறுகிறது. ஓட்டுனர் நம் கண்ணில் படுவதில்லை. ஆனால் நம்ப வேண்டும். விமானத்தைஎல்லாம் இப்போது கம்ப்யூட்டர் தான் ஒட்டுகின்றதாம். இங்கே யாரை நம்புவது?

முதலில் நான் கால்பந்தாட்ட வீரனாக நினைத்தேன்.பீ டி மாஸ்டர் சொன்னவுடன் வேகமாக பந்தை காலால் ஏத்தினேன். என்னை சிலருடன் சேர்ந்து நிற்க சொன்னார். பின்னர் எங்கள் அனைவரையும் தகுதியற்றவர் என்று வெளியேற்றிவிட்டார். நான் உடனே ஹாக்கிக்கு மாறினேன். ரைட் அவுட் பொசிசனில் விளையாடினேன். முதல் மேட்ச் விளையாட போகும் பொது ஹாக்கி மாஸ்டர் என்னை புறம்தள்ளி வேறு ஒருவனை ஆடவைத்தார். " மனம் தானாய் ஹாக்கி வேண்டாம் என்று சொல்ல, கூடை பந்து விளையாட சென்றேன். பனிரெண்டாம் வகுப்பு வந்துவிட்டதால் மனம் படிக்கலாமே என்று அலாரம் அடித்தது. நடுவில் கொஞ்ச நாள் இசை கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டேன். இப்போது எல்லாம் மறந்து போய்விட்டது. இவை எல்லாம் வாழ்கையில் என்முன் வந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர நான் செய்துகொண்ட சமரசத்தில் விளைவுகளே. பாதிரியார் மீண்டும் ஒருமுறை கேட்டார் , ஆனால் வித்தியாசமாக "...................... ஆகிய நீங்கள் ...................... ஆகிய குணவானை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதமா?" நான் பதில் சொன்னதாக பாதிரியார் நினைத்து விட்டாரோ? அதனால் அருகில் நிற்கும் மணப்பெண்ணை கேட்கிறாரோ? இப்போதும் மனது மாத்திரம் தான் இல்லை என்கிறது. வாய் மூடியே இருக்கிறது.

சடங்குகள் எல்லையை கடந்துவிட்டது. இருந்த ஒரே ஒரு வாய்ப்பும் போய் விட்டது. இனி இவள் தான் , இன்பம், துன்பம், கஷ்ட்டம், நஷ்ட்டம் என்று நான் நினைத்துகொள்ளும் எல்லாவற்றிலும் கூடவரும் வழிபயணி.

கேள்விகள் முடியவில்லையோ? பாதிரியார் சர்ச் இல் கூடி இருந்த அனைவரையும் பார்த்து, "இங்கு கூடி இருக்கும் உங்களில் யாரவது, இந்த திருமணத்தில் இவர்கள் இருவரும் இணைய கூடாத நியாயமான காரணம் எதுவாகிலும் உண்டென்றால் இப்போது கூறலாம் "என்றார். ஜன்னல் வழியே தெரியும் அரசமரம் சொல்வது எனக்கு மட்டுமே கேட்டது. பாதிரியார் " இனி ஒருவனும் ஒருக்காலும் ஒன்றும் சொல்லாதிருக்க கடவன் " என்றார். நான் எனது மனதை பார்த்தேன்.

மனது அரசமரத்தில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது. அநேகமாக அது திரும்பிவராது. ஏன் என்றால் மனதால் பேசாமல் இருக்க முடியாதல்லவா?